search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தையை காப்பாற்றிய பெண்"

    அமிர்தசரஸ் ரெயில் விபத்தின் போது ரெயிலில் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்ட குழந்தையை பெண் ஒருவர் பாய்ந்து சென்று காப்பாற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. #PunjabTrainAccident
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் கடந்த 19-ந்தேதி இரவு தசரா கொண்டாட்டம் நடந்தது.

    ரெயில் தண்டவாளம் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தபோது சுமார் 600 பேர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்களில் பலர் தண்டவாளத்திலும், அதன் அருகேயும் நின்று இருந்தனர்.

    அப்போது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் பட்டாசுகள் அதிகமாக வெடித்ததால் ரெயில் வரும் சத்தம் கேட்கவில்லை. இதில் ரெயில் மோதி 60 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    ரெயில் அருகில் வருவதை பார்த்ததும் பலர் அலறியடித்தபடி ஓடினார்கள். அப்போது ஒரு குழந்தையை ஒருவர் தூக்கி வீசினார். அந்தரத்தில் வந்த குழந்தையை பார்த்த மீனாதேவி என்ற 55 வயது பெண் ஓடிச்சென்று பாய்ந்து குழந்தையை பிடித்தபடி கீழே விழுந்தார். இதனால் குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது.

    உடனே குழந்தையை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்து பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    விசாரணையில் உயிர் தப்பிய 10 மாத ஆண் குழந்தையின் பெயர் விஷால் என்பதும், அவரது தாய் ராதிகா ரெயில் விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிந்தது.

    குழந்தை விஷாலை அவரது தந்தை புத்துனிராம் தூக்கி வீசி உள்ளார். ஆனால் அவர் ரெயில் மோதி பலியாகி விட்டார் என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து மீனாதேவி கூறும்போது, “ரெயில் விபத்தில் நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன். அப்போது ஒரு குழந்தை பறந்து வருவதை பார்த்ததும் பாய்ந்து சென்று பிடித்து காப்பாற்றினேன்” என்றார்.

    குழந்தையை காப்பாற்றிய மீனாதேவியை பலர் பாராட்டி உள்ளனர்.  #PunjabTrainAccident
    ×